என்னவாகும் சிறுவணிகர்களின் நிலை?

கால மாற்றத்தின் விளைவுகள், நுகர்வுக் கலாசாரத்தின் பரிமாணம்… இப்படி எல்லாம் சேர்ந்து, சிறு வியாபாரிகள் வாழ்க்கையைச் சிதைத்துக்கொண்டிருக்கின்றன. ‘சொந்த வியாபாரம் செய்கிறேன்… நான்காவது தலைமுறையாக இந்தத் தொழில் தொடர்கிறது…’ என்று பெருமை பொங்கக் கூறுபவர்களைத் தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. என்ன காரணம்?

ஊசி முதல் காய்கறி வரை, வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் விற்கும் முறை பரவலாகிய பிறகு, ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையைத் தேடி அலைய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. சிறு வியாபாரிகளின் கடைகளில் கிடைப்பதைவிட குறைவான விலையில் ‘சூப்பர் மார்க்கெட்’ எனப்படும் பேரங்காடிகளில் பொருட்கள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை இது நல்ல விஷயம்தான்.

பேரங்காடி வணிகர்கள், பொருட்களை உற்பத்தியாகும் இடங்களில் இருந்தே மொத்தமாக வாங்குவதால், குறைந்த அளவில் லாபம் வைத்து, அதிகளவில் விற்க முடிகிறது.

கூடவே, பேரங்காடிகளில் பொழுதுபோக்கு அம்சங்களையும் வைத்திருக்கிறார்கள். ‘வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கியது போலவும் ஆச்சு… பொழுதுபோக்குக்கு வெளியில் வந்த மாதிரியும் ஆச்சு’ என்று, ஷாப்பிங் செல்வதை, ரசனை அனுபவமாக குடும்பத்தினர் அனைவருமே உணரும் ஒரு சூழலை பேரங்காடி வணிகர்கள் ஏற்படுத்திவிட்டனர். ஆனால், சிறு வணிகர்களின் நிலை?

மாவு மில்கள் எங்கே?

பேரங்காடிகளில் இட்லி மாவு விற்க ஆரம்பித்தபின், வீட்டில் அரிசி, உளுந்து ஊறவைத்து அரைக்கும் வழக்கம்கூட குறைய ஆரம்பித்திருக்கிறது. அரிசி, உளுந்து அரைத்துத் தருவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் அடுத்த தொழிலை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. இதைப்போலவே, மிளகாய், மல்லி மாவு அரைத்துக் கொடுப்பதற்கென்றே உள்ள மில்களின் நிலைமையும் ஆகி விட்டது. எல்லா வகை மசாலா மாவும் இப்போது பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

தமிழகம் முழுவதும் இருக்கும் சிறு வியாபாரிகளில் 21 லட்சம் பேர், பேரங்காடி வணிகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், இப்படிப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டும். ஏற்கெனவே அரசின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள், பண மதிப்புநீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., உரிமம் புதுப்பிப்பதில் இருக்கும் சங்கடங்கள், பெருகி வரும் ஆன்-லைன் வர்த்தகம் என பல ரூபங்களில் பாதிப்பை எதிர்கொண்டுவரும் சிறு வியாபாரிகள், பேரங்காடிகளுடன் ஒரு பெரும் போட்டியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

வியாபாரம் என்பதுகூட, உளவியல்ரீதியிலான சிந்தனையின் வெற்றிதான். வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வியாபாரம் என்பது, பெரும்பாலும் பெண்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. எனவே, பேரங்காடிகளை நடத்தும் நிறுவனங்கள், தங்களது விளம்பரங்களில் பெண்களையே மையப்படுத்துகின்றனர். மேலும், வியாபாரத்தைப் பொறுத்தவரை, இலவசம் என்பதே கிடையாது என்பதை யாரும் உணர மறுக்கின்றனர்.

குறைந்த விலையில் லாபம் ?

காய்கறி விற்கும் சிறு வியாபாரி நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும், பேரங்காடிகள் தங்களது விலையை வெகுவாகக் குறைத்து லாபத்தையும் பெறமுடியும். விற்காத காய்கறிகளை, உணவகங்கள், விடுதிகள், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்க, பேரங்காடிகளால் முடியும். ஆனால், சிறு வியாபாரிகளுக்கு அப்படி எந்த வழியும் இல்லை. அதனாலேயே, சிறு காய்கறி வியாபாரி, அன்றாடம் மீதமிருந்தால் அழுகும் காய்கறியின் அடக்க விலையையும் விற்கப்படும் காய்கறியோடு சேர்த்து லாபம் பார்க்க வேண்டியுள்ளது. அப்படிப் பார்க்கையில், சிறு காய்கறி வியாபாரி, ஒரு நாளும் பெரு வணிகரோடு, விலையில் போட்டி போட முடியாது.

மின் சாதனப் பொருட்களை உற்பத்திசெய்வது எளிது. ஆனால், அவற்றைச் சந்தைப்படுத்துவது, கடினம். அதனால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மொத்தமாக யாரிடமாவது விற்றுவிடுவது எளிது என முடிவெடுத்து, பேரங்காடிக்காரர்களிடம் குறைந்த லாபத்துக்கு விற்றுவிடுகின்றனர். அப்படி வாங்கி வரப்படும் பொருளை, குறைந்தபட்ச சில்லறை விலையைக் காட்டிலும், பல மடங்கு குறைவான விலைக்கு விற்றாலே, பேரங்காடிக்காரர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால், உற்பத்தியாளர்களிடம் பல்வேறு நிபந்தனைகளை வைத்துப் பொருட்களை வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆண்டு முழுவதும் தள்ளுபடி?

வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேரங்காடிக்காரர்கள், ஆண்டு முழுவதும் தள்ளுபடியை அறிவித்தபடியே இருக்கிறார்கள். இதனால், தேவையில்லாத பொருட்களையும்கூட வாங்கிக் குவிக்கும் நுகர்வுக் கலாச்சாரமும் பரவ ஆரம்பித்திருக்கிறது.

எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும் பேரங்காடிகளின் தேவையும் பெருக்கமும் இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதவை. லாபகரமாக அவற்றை நடத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் சில வியாபார உத்திகளையும் கையாளத்தான் செய்வார்கள். ஆனால், சிறு வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் உறவு முறைகளோடு பழகி வந்த அந்நியோன்யத்தை எப்படி ஈடுசெய்யப்போகிறோம்?

-புதுமடம் ஜாபர் அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *